காலை 9:50 மணிக்கு மூன்று பேருந்துகளில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் கோவிலை நோக்கிக் களப்பயணமாய் கிளம்பினோம் .
காலை வெயில் ஊரெங்கும் சுட்டெரிக்க மாணவர்களின் மனங்கள் மட்டும் குற்றாலச் சாரலாய் குதூகலிக்க சாலைகள் நீள நீள சந்தோஷம் நிறைய நிறைய இந்த ஆண்டின் முதல் களப்பயணத்தில் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.சோழனால் தொடங்கப்பட்டு பல்லவனால் நிறைவு பெற்ற திருவெள்ளறை கோவிலின் மொட்டை கோபுரம் எங்களை வரவேற்க ,
நெட்டை மதில்கள் எதிரொலிக்க ஆரவாரமாய் அக்கிரமித்தனர் கோவிலை. 108 திவ்ய தேசங்களில் நிஜமாகவே மூத்ததான முக்தித்தளம். புண்டரிகாட்சப் பெருமாளையும் தாயாரையும் மதங்களைக் கடந்து மனங்களால் வணங்கினர் .தலையில் முக்காடிட்ட இஸ்லாமியக் குழந்தையின் தலையில் சடாரி வைக்க அர்ச்சகர் தயங்க,தயக்கமின்றி தலையை நீட்டி சடாரியை ஏந்தி கொண்ட நம் குழந்தை சாதி மத பேதங்களை உடைத்தெறியும் நம் பள்ளியின் அடையாளமாய் நின்றாள்.சிபிச் சக்கரவர்த்தி கட்டிய ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கோவிலின் வரலாற்றை விளக்கும்போது விழிகள் விரிய அமைதியாய் கேட்டுக் கொண்டவர்கள் ஆலமரத்தின் விழுதுகளை கண்டவுடன் ஆடிக் களித்துக் கூடிக் குதித்து சிரித்து சிரித்தே சோர்ந்து போனார்கள் .குடைவரை குகைகளுக்குள் குழந்தைகள் குலுங்கி சிரிக்க, சிரித்த சிரிப்பொலி எதிரொலியாய் ஒலிக்க அவர்களுக்குள் ஒளிந்திருந்த குழந்தைமை வெளிவர கொள்ளை அழகாய் நம் குழந்தைகள். மதிய உணவை மகிழ்வுடன் உண்டு விட்டு அருகில் இருந்த மார்பிடுகு பெருங்கிணறையும் ( ஸ்வஸ்திக் கிணறு)பார்த்துவிட்டு நெஞ்சில் தங்கிய நினைவுகளை நிழற்படங்களாய்ப் பதியச் செய்து பள்ளிக்குத் திரும்பினோம் .மாணவர்களின் வாழ்நாளிற்கான அனுபவமாய் அமைந்த அற்புதமான களப்பயணம் இது.