Date: 17.09.2022
Invitation
உலகின் பிற பகுதிகளிலும் இந்தியாவின் சில மாநிலங்களிலும் அறிஞர்களைப் போற்றும் பண்பு அவர்தம் அன்றாட வாழ்வின் பகுதியாக இருப்பதுபோலத் தமிழகத்தில் இன்று இல்லை என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. அதிகாரம் சார்ந்ததாகவும் மன விருப்பு வெறுப்பு சார்ந்ததாகவும் கொண்டாட்டங்கள் இங்கு அமைந்து விடுகின்றன.
அறிவு தளத்தில் – இலக்கிய தளத்தில் இயங்கும் ஆளுமைகளைக் கொண்டாடுகிற ஒரு குடிமைச் சமூகத்தில்தான் எவருக்கும் அஞ்சாமல் சமூக நலன் சார்ந்த சரியைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் பேசும் அறிஞர்கள் உருவாகி வருவார்கள். சமூகத்தின் மனசாட்சி எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது அறிஞர்கள் மூலம்தான். அறிவு பாரம்பரியமாகத் தொடர சமூகத்தில் அத்தகைய சூழல் நிலவுவது அவசியம் என்கிற உணர்விலிருந்து பிறந்ததுதான் இந்த “அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்” நிகழ்வு.
வருங்கால சமூகமான இன்றைய மாணவர் உள்ளங்களில் அறிவுலகத் தேவையை உணர்த்துவதும், எவ்விதமாகக் கொண்டாடுவது என்கிற பயிற்சியை அவர்களுக்கு அளிப்பதும் அவசியம் என்று உணர்கிறோம். தனிமையிலும் குறைந்த ஒளியிலும் மௌனத்திலும் நம் அறிஞர்கள் அமிழ்ந்து போவதையும் போலிகள் கொண்டாடப்படுவதையும் கண்டும் காணாதது போல நாம் கடந்து செல்வது அறிவுலகில் இயங்கும் ஆளுமைகளின் ஆர்வத்தையும் மன உறுதியையும் நீர்க்கச்செய்யும் பண்பாகும். அதில் ஒரு முறிப்பை ஏற்படுத்த வேண்டாமா என்கிற விழைவின் ஒரு வெளிப்பாடாகவே இந்த அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும் என்கிற எளிய நிகழ்வு. நண்பர்கள் அனைவரும் வருக…