KANAVU MEIPADA
STD: XI STUDENTS
DATE: 27.07.2019 - Saturday
எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கனவு மெய்ப்பட மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற்றது. பூமியை உடைக்கும் விதை நீ தான் என்ற தலைப்பில் மனிதவள பயிற்றுனர் கெம்பா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது. இன்றைய கால கட்டம் தகவல் தொழிற்புரட்சி கால கட்டம். நம் அறிவினை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நம் விருப்பத்திற்கேற்ப பாடத்தினை தேர்ந்தெடுத்து படித்து நாம் விரும்பும் வேலையை தீர்மானித்து அதில் ஈடுபடவேண்டும். மதிப்பெண்களும் முக்கியம்தான் ஆனால் மதிப்பெண்களை தாண்டி அறிவு, திறன்கள் தேவைப்படுகின்றன. இந்த மின்னனுயுகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறன்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மக்களை புரிந்து கொள்ளும் திறன் தேவைப்படுகிறது. மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை நோக்கி நாம் பயணப்பட வேண்டும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாய்மொழி மட்டுமில்லாமல் ஆங்கிலத்தையும் சரியாக கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மொழியை புதிதாக படிக்க படிக்க மனது குழந்தை பருவத்தை நோக்கி செல்கிறது. ஒவ்வொரு புதிய மொழியை கற்கும் போதும் நாம் குழந்தைகள் ஆகின்றோம். விளையாட்டிலும் அதிகம் ஈடுபாடு காட்ட வேண்டும். தனியாக இல்லாமல் குழுக்களாக இணைந்து செயல்பட தெரிய வேண்டும். சேவை மனப்பான்மையோடு வளர வேண்டும். தொடர்ந்து சமூகத்திற்கு பயன்படும் வகையில் நாட்டுநலத்திட்டத்தில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். மரம் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், இரத்த தானம் என்று சமூகத்திற்கு பயன்படும் வகையில் நாம் வாழ வேண்டும். சேவை மனப்பான்மையோடு இயங்கும் போதுதான் எப்பொழுதும் இளமையோடும் சுறுசுறுப்போடும் இருக்க முடியும். வெளியுலக தொடர்பு அதிகரிக்க அதிகரிக்க தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீள முடியும். நம்மை நாமே பெருமிதத்தோடு உணர வேண்டும். தைரியமாகவும் நம்பிக்கையோடும் இளைஞர்கள் செயல்படவேண்டும். நம் நம்பிக்கையும் தைரியமும்தான் நம் திறன்களை வளர்த்து நம்மை முழு மனிதனாக மாற்றும் என்றார். கருத்தரங்கில் பள்ளியின் தலைவர் எ.ராமசாமி, செயலர்.பி.சுவாமிநாதன், பொருளர்.எஸ்.செல்வராஜன், துணைத்தலைவர் எம்.குமரவேல், இணைச்செயலர் பி.சத்யமூர்த்தி பள்ளியின் முதல்வர் க.துளசிதாசன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.