திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில் மாணவர்களுக்கான மாதந்திர ‘கனவு மெய்ப்பட’ நிகழ்வை தொடங்கி வைத்து, சூழலியலாளர் ‘ஓசை’ காளிதாசன் அவர்கள் பேசியதாவது,
இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே இடம் பூமி மட்டும்தான். பூமியில் மட்டும்தான் ஆக்ஸிஜன் இருக்கிறது. நீர் இருக்கிறது. மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே பல உயிரினங்கள் பூமியில் தோன்றி வாழ்ந்திருக்கின்றன. அந்த உயிரினங்களின் மரபுகளை சுமந்து கொண்டு இன்னும் சில உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மனித இனமும் தோன்றியது.
தொழிற்புரட்சியின் விளைவாக வளர்ந்து வரும் அறிவியல் யுகத்தில், நாளொரு வளர்ச்சி பொழுதொரு புதுமை என அறிவியல் உலகில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கைபேசியும் கணினியும் அத்தியாவசிய தேவைகளாக உருவகிக்கப்படுகின்றன. கணினியே உலகம் என்று ஒரு தலைமுறை வாழத் தொடங்கி விட்டனர். கணினி உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து தந்தாலும், கைபேசியும், கணினியும் நம் உள்ளங்கைக்குள் உணவினை கொண்டு வந்து தராது. நமக்கு பசி எடுத்தால் சாப்பிட உணவு இந்த மண்ணில் தான் விளைந்தாகவேண்டும். இந்த மண்ணும் நீரும் இயற்கையும் பாதுகாக்கப்படவேண்டும்.
நம் முன்னோர்கள் பாதுகாக்கத் தவறியதால் தான் இன்று நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலைக்கு பிறகும் நாம் சுதாரித்துக் கொண்டு செயல்படாவிட்டால், இன்னும் பிறக்காத நம் எதிர்காலத் தலைமுறையினர் பெரிய ஆபத்தை சந்திப்பார்கள். சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், “இன்னும் நூறு ஆண்டுகளில் இந்த பூமி மனித இனம் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்” என்று ஆராய்ச்சி அறிக்கை வெளியிட்டார். அது வெறும் கற்பனை அறிக்கை அல்ல... அவர் இப்பிரபஞ்சத்தை அறிந்த மாமேதை. சூரியக் குடும்பத்தில், பூமியை சுற்றி அளவுக்கு அதிகமான காபன்-டை-ஆக்ஸைடு படலம் படர்ந்து வருவதால், பூமி உள்வாங்கும் வெப்பத்தை வெளியேற்ற இயலாது பூமி சூடாகிவிடும் என்ற விண்வெளி அறிவியல் தரவுகளின் அடிப்படையிலேயே அவர் கூறினார். இந்த பிரபஞ்சத்தில் நம் சந்ததியினர் வாழ பூமி ஒன்று மட்டுமே உள்ளது. இந்த சூழலில் நமக்கு அழுக்கை உற்பத்தி செய்யாத அறிவியல் வேண்டும். வியாபாரம் என்பதை தாண்டி இயற்கை பாதுகாப்புக்கு நாம் ஒவ்வொருவரும் முக்கியத்துவம் கொடுத்திடவேண்டும்.
வனங்களின் உணவுச் சங்கிலியில் பசுமை செழித்து இருந்தால் வன உயிரினங்கள் செழித்து வாழும். வனங்களில் மரங்களை மனிதர்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. வன உயிரினங்களுக்கும் வனத்திற்குமான பல்லுயிரிய இணைப்பால் தான் வனங்கள் உயிர்பிக்கப்படுகின்றன. வனங்களின்ஏகாந்த வெளியின் உணவுச் சங்கிலியில், மனிதர்களாய் நம் காலடி பட்டதும் தான் வனங்களின் அழிவு தொடங்கியது. மழை நீரை சேமித்து நமக்கு வழங்கி வந்த சோலை வனங்கள் ஹெக்டேர் கணக்கில்அழிக்கப்பட்டு, வனத்தின் பல்லுயிர் சூழல் முற்றிலும் சிதைக்கப்பட்டு, ஓர்இன காடாக தேயிலைத் தோட்டங்களாக மழைப் பிரதேசங்கள் உருமாற்றப்பட்டன. பல நூற்றாண்டுகளாக செழித்து உருவான சூழல் அடுக்கு சிதைந்து போனது. வளங்களை விற்பனை பொருளாக கருதி சொந்த வனவளத்தை அழித்ததால் தான் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இன்று உணவு இல்லை. முன்னோர்கள் செய்த தவறுகளால் கடும் பஞ்சத்தில் அவர்கள் தவிக்கிறார்கள்.
நாம் நம்மிடையே எஞ்சியிருக்கும் வனங்களையும் வன உயிர்களையும் பாதுகாக்கவேண்டும். சுற்றுசூழலுக்கு உகந்த செயல்களை செய்து இயற்கை தாயின் பிள்ளைகளாக நாம் வாழ வேண்டும்.வனம் நம் எதிர்காலத்திற்கான வளம்... மாற்றத்திற்கான முதல் விதையை நாம் விதைத்து நம்பிக்கையுடன் தொடங்கிடுவோம் நம் கனவு மெய்படும் இயற்கையும் பாதுகாக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைவர் A.ராமசாமி, இணைச் செயலாளர் B. சத்யமூர்த்தி, பள்ளி முதல்வர் க.துளசிதாசன், மாணவ மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.