vkuv2017

VELLI KATTRU ULLAE VARATUM - 2017

அந்த மூன்று மணிநேரம் பல்கலைக் கழகத்தில் இருந்தேனா? கற்றறிந்த பேராசிரியப் பெருமக்களோடு பேசினேனா? நாட்டின் நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதமா அது? என்றெல்லாம் வியப்பும் அதிர்ச்சியும் கலந்த நேரமாகத்தான் அதனைச் சொல்ல வேண்டும். இல்லை. அது எஸ்.ஆர்.வி. பள்ளி. அதுவும் பதினைந்து பதினாறு வயதைக் கடந்த பிள்ளைச் செல்வங்கள் அவர்கள். அவர்களுக்கு எதுவெல்லாம் தெரியாது என்று நான் இதுவரை நினைத்தேனோ, அவர்களுக்கு எதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை என்று நான் கவலைப்பட்டேனோ, அவர்களுக்கு எதுகுறித்த சிந்தனை எல்லாம் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தப்பட்டு புலம்புகிறார்களோ.... அந்த அத்தனை எண்ணங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டு கம்பீரமாகக் காட்சி தருகிறார்கள் அந்தச் செல்வங்கள். பெரியாரை, காமராஜரை, காந்தியை, நேதாஜியை, நேருவை, இந்திராவை, மோடியை என எல்லாரையும் பற்றியும் கேட்கிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை குறித்த கவலை இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் இருக்கிறது. சீமான் நல்லவரா என்ற கேள்வி இருக்கிறது. கடந்த ஐம்பதாண்டுகள் தமிழ்நாட்டின் நிலைமை சீரழிய என்ன காரணம் என்ற பெரும் கேள்வி இருக்கிறது. சினிமாக்காரர்கள் கையில் நாட்டை கொடுக்கப் போகிறோமா என்ற பயம் இருக்கிறது. மதக் கலவர பீதி கேள்வியாய் வெடிக்கிறது. சாதி அரசியல் பற்றியும் கெளரவக் கொலைகள் குறித்தும் கவலைப்படுகிறார்கள். நீட் தேர்வு, பொருளாதார நடவடிக்கைகள், 1000 ரூபாய் நோட்டுக்கான தடை, ஜல்லிக்கட்டு, காஷ்மீர் என பாடப்புத்தகத்தில் இல்லாத எல்லாவற்றையும் பற்றியும் கேள்விகளைக் கேட்கிறார்கள். சொல்லும் பதில் அவர்களுக்குப் புரிகிறது. அதாவது தங்களது வாழ்வின் பதினைந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் பூமிக்கு மேல்... வானத்துக்குக் கீழ் உள்ள அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார்கள் அந்தச் செல்வங்கள். அவர்களை நான் மாணவ, மாணவிகள் என்று சொல்லவில்லை. செல்வங்கள் என்று தான் சொல்கின்றேன். ஆமாம்! தமிழகத்தை வழிநடத்தப் போகும் செல்வங்கள் அவர்கள். தமிழ்நாடு கவலைகொள்ளத் தேவையில்லை. நாட்டுக்காகச் சிந்திக்கும் 200 பேர் திருச்சி பட்டறையில் தயார் ஆகிவருகிறார்கள் என்பதற்காக இந்தச் சமூகம் பெருமைப்படலாம். பல்கலைக்கழகம், பேராசிரியர்கள், நாடாளுமன்றம் என்று உருவகத்துக்காகத்தான் சொன்னேன். அங்கு இருப்பவர்களே இந்தப் பிரச்னைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. இவர்கள் கவலை கொள்கிறார்கள் என்றால் சமூகச் சூடு அவர்கள் தோல் வரைக்கும் இறங்கி உள்ளது. இன்றைய சமூக வலைத்தளங்கள் அவர்களை அரசியல் மயப்படுத்தி இருக்கின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டி சமூகப் புத்தகங்களையும் அவர்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பள்ளி தான் போற்றத்தக்கது. பாடப் புத்தகம் தாண்டி 'எக்ஸ்ட்ரா' கேள்வி கேட்கத் தடை போடும் பள்ளிகளுக்கு மத்தியில் 'எக்ஸ்ட்ரா' புத்தகங்களை படிக்க வைத்து ஊக்கப்படுத்தும் பள்ளியாக எஸ்.ஆர்.வி. இருக்கிறது. கனவு பள்ளியை உருவாக்கி கனவு மாணவர்களை உருவாக்கி வரும் எஸ்.ஆர்.வி. பள்ளியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு எஸ்.ஆர்.வி. பள்ளி இருந்தால் போதும். நமது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும். தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என வாழாமல் வீடு தாண்டி, பள்ளி தாண்டி, கல்லூரி தாண்டி, தனது சுற்றம் தாண்டி, தனது ஊர் தாண்டி, ஏன் நாடுகள் தாண்டியும் சமூக வேளாண்மை செய்யக்கூடிய சமூக உழவர்களை உற்பத்தி செய்வதே தேவையான கல்வி. அந்தக் கல்வியைத் தரும் எஸ்.ஆர்.வி. பள்ளியில் பேசும் வாய்ப்பு பெரும் வாய்ப்பு. அந்த மூன்று மணிநேரத்தில் நான் கற்றுக் கொண்டேன். எனக்கு கற்பித்த செல்வங்களுக்கு நன்றி! ப. திருமாவேலன் பத்திரிக்கையாளன்

Login


Visitors Counter