HARVEST 2016

HARVEST 2016

HARVEST - 2016 சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும் திருச்சி,ஜூலை 15: சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக மாணவர்கள் திகழ வேண்டும் என்றார் தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநரும் மற்றும் அரசு செயலருமான த.உதயசந்திரன். திருச்சிமாவட்டம்,சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற அறுவடை 2016- விருதுகள்வழங்கும் விழாவில் பங்கேற்று, பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, மேலும் அவர் பேசியது: பள்ளி மாணவர்கள் மதிப்பெண்களை மட்டும் பெரிதாக நினைக்காமல் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். படிப்பதுடன் நின்றுவிடாமல் சமூகப்பார்வையுடன் உடையவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்.பெண்கள் சட்டத்தின் ஆட்சியை, வலிமையை நிலைநிறுத்த முன்வர வேண்டும். சமுதாயம் எதிர்பார்க்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் காமராஜருக்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடிய நிலையில், பட்டித் தொட்டியெல்லாம் பள்ளிகளைத் திறந்தவர் காமராஜர். அதோடு மட்டுமல்லாமல் மதியஉணவுத்திட்டத்தையும் தமிழகத்தில் தொடங்கியவர் அவர். காமராஜரின் திட்டத்துக்கு அவரது அமைச்சரவையிலிருந்த சில சகாக்கள்,அதிகாரிகள் நிதி நிலையைக்காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், பிச்சை எடுத்து நிதியைதிரட்டியாவது இத்திட்டத்தைத் தொடர்ந்துசெயல்படுத்துவேன் எனக் கூறி காமராஜர் தொடங்கிய திட்டம் இன்று வரை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த நிறுவனத்தைசென்னையில் தொடங்கி, பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருபவர் உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்விவாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். அவர் அமெரிக்காவில் படித்து அங்கேயே வேலை செய்திருக்கலாம். ஆனாலும் தான் பிறந்த தமிழகத்திலுள்ள கிராமங்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் சென்னையில் நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார். அவரின் இந்த செயல்பாட்டுக்கு தூண்டுகோலாக இருந்தது அவரது வீ்ட்டில் வேலைபார்த்த பெண்தான். பொறியியல் படிப்பு என்பது உபகரணங்களால்தால் ஆனதுஎன எண்ணக்கூடாது. மனித வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்பதை கற்கக்கூடிய கல்வியாகத் திகழ வேண்டும். மருத்துவப் படிப்பு படிக்கும மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்துவிட்டோம் என எண்ணாமல் மனித மனங்களைக் கவருவதற்கு குறித்து கவனம் செலுத்துங்கள். மனிதமனங்களைக் கவருவதுடன் அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வதும் மிக முக்கிய அம்சமாகும். லட்சியத்தை அடையும்வரை மனதில்உத்வேகம் இருக்க வேண்டும். வாழ்வில் அடைவதற்கு இலக்குகள் அதிகம் இருந்தால்தான் வாழ்க்கையில் ஓட்டம் அதிகமாக இருக்கும்.எனவே புதிய முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். பொறியியல் படிப்புக்காக கல்விக்கடன் கோரிதேசியவங்கியில் விண்ணப்பித்த எனக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு நிலைகளைத்தாண்டி படிப்பு முடித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டேன். ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டபோது, அனைத்து வங்கிகளையும் அழைத்து 9000 மாணவ, மாணவிகளுக்கு ரூ.110 கோடி வரை கல்விக்கடன் வழங்கினேன். என்னாலே எல்லாம் முடியும்போது உங்களால் ஏன் முடியாது. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பைத் தொடங்கியுள்ள நீங்கள், உங்களின் கனவுகள் மெய்ப்பட சிலவற்றை கடைப்பிடித்தாகவேண்டும். ஒழுக்கத்தை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கக்கூடாது. பெற்றோர்களும் தாங்கள் விரும்பியதைதான் தங்கள் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று எண்ணாமல், அவர்களின் விருப்பத்துக்கேற்ப விட்டுவிடுங்கள். தங்கள்குழந்தைகளை தோழர்களாகப் பாருங்கள், அப்போதுதான் உங்களின் கனவுகளையும், உங்களின் குழந்தைகளின் கனவுகளையும் நிறைவேற்ற முடியும் என்றார் உதயசந்திரன். இந்த விழாவில், எஸ்.ஆர்.வி. பள்ளியில் பயின்று, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும், கல்விச் செலவுகளுக்கு நிதி இல்லாமல் தவித்தமாணவர் பி.கோகுலநாதனுக்கு ரூ.1.08 லட்சம் உதவித் தொகையையும் உதயசந்திரன் வழங்கினார். விழாவுக்கு பள்ளித் தலைவர் ஏ.ராமசாமி தலைமைவகித்தார். துணைத் தலைவர் எம்.குமரவேல்,இணைச்செயலர் பி.சத்யமூர்த்தி முன்னிலைவகித்தனர். பள்ளிப் பொருளாளர் எஸ்.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் க.துளசிதாசன் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையை வழங்கினார். மாணவிகள் எஸ்.சுருதி,சி.விதுலா, எம்.நுஸ்ஹத்கானம், ஏ.அப்துல்சாரூக் ஆகியோர் தங்களின் அனுபவ உரையை வழங்கினர். முன்னதாக, பள்ளிச் செயலர் பி.சுவாமிநாதன் வரவேற்றார். துணைமுதல்வர் டி.பி.எஸ்.ராஜ்குமார் நன்றி கூறினார். .

Login


Visitors Counter