EDUQUEST2016

EDU QUEST 2016

வைகறை மேகங்கள் விடியலை கொண்டு வரும் நாங்களும் கல்விக்கான கேள்விகளுடன் விடியலைத்தேடி பயணம் புறப்பட்டோம். அதிகாலை வேளை அழகாய் தொடங்கியது எங்கள் பயணம். பள்ளியிலிருந்து இணைச்செயலர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஓட்டுநர், நடத்துனர், ஆய்வக உதவியாளர் என்று 50 பேர் கல்விக்குறித்த தேடலுடன் சென்னையில் இரண்டு நாட்கள் என்றும் முடிவு செய்து பயணத்தை மேற்கொண்டோம். எங்கள் பயணத்திட்டம் கல்வியாளர் வசந்தி தேவி, மாண்டிச்சோரி முறையில் பயிற்றுவிக்கும் கல்வியாளர் உமா சங்கர் அவர்கள் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் அவர்களை சந்தித்து உரையாடுவது என்று முடிவு செய்தோம். கலந்துரையாடலும் கருத்துரையும் மட்டும் கல்வியை தீர்மானித்துவிடமுடியுமா என்று யோசித்து பறந்து விரிந்த கடலை கல்வியாளர்களை சந்தித்து கலந்துரையாடுதலும், அருங்காட்சியகம் நூலகம் கலை இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதோடு முடிவடைவதா கல்வி? இல்லையே மனிதர்களை வாசித்தல் அல்லவா கல்வியின் மிக முக்கிய நோக்கம். பயணம் அதைதான் சாத்தியப்படுத்துகிறது. அதிகாரத்தின் முகமூடி அகன்று பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவி கொள்கிறோம். எல்லார் வீட்டு சாப்பாடும் நம் வீட்டு சாப்பாடு ஆகிறது. யாருக்கு தலைவலி என்றாலும் தைலம் தேய்கின்றன சில கைகள். வாந்தியற்ற பயணமே இருக்க முடியாது. பயணத்தில் யாருக்காவது வாந்தி வந்துவிடும் யார் வாந்தி எடுத்தாலும் தலைபிடித்து விடவும் பரவாலப்பா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இந்த பிளாஸ்டிக் கவரிலேயே வாமிட் பன்னுங்க நான் தூக்கி எறிஞ்சுக்குறேன் என்று கூற சில அன்பார்ந்த மனிதர்கள் இருப்பார்கள். லேடிஸ் நிறைய பேர் இருக்காங்க சரியான டாய்லட் இருக்கிற இடமா பாத்து வண்டியை நிறுத்தங்கப்பா என்று சொல்லுகிற கரிசனம் மிக்க ஆண் நண்பர்களை பயணம்தான் பெற்றுத்தரும். கிடைத்த இடத்தில் கிடைத்த நேரத்தில் தூங்கி குளித்து கிளம்பி என்று வாழ்வின் நல்லது கெட்டதை சகித்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், கற்றுத்தருதல் பயணமாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. பயணத்தில்தான் ஆண் பெண் மறக்கிறோம். சிறியவர் பெரியவர் மறக்கிறோம். சாதி மதம் மறக்கிறோம். நமது அதிகாரத்தை அகற்றுகிறோம். விளையாடுகிறோம். சத்தமாக சிரிக்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம் மொத்தத்தில் சுயநலமிக்க குடும்பமனிதராக இல்லாமல் உலக மனிதராகிறோம். குழந்தையாய் மாறுகிறோம். மொத்தத்தில் பயணம்தான் முழுமை பெற்ற கல்வி. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் எவ்வளவு பெரிய புத்தகத்தையும் பாதுகாத்தல் எப்படி அதற்கான நவீன உத்திகள் நவீன கருவிகளை பயன்படுத்தும் முறை கிடைத்த தரவுகளை சேகரிக்கும் முறை என்று விளக்கமாக எடுத்துக்கூறினார் நூலகத்திலுள்ள ஆய்வாளர் ஒருவர். வாழ்வின் வரலாற்று நிகழ்வு கல்வியாளர்கள் வசந்தி தேவி ச.சீ.ராஜகோபாலன், உமா சங்கர் ஆகியோரை சந்தித்தது. அவர்களிடம் கலந்துரையாடிய பொழுது அந்த மாமனிதர்களின் போராட்டக்குணமும் அறச்சீற்றமும்,அன்பும், நீதியும், எங்களை மௌத்தில் ஆழ்த்தியதோடு தங்களை பணிக்கவும் செய்தது. சகமனிதர் மேல் கொண்ட காதலும் கருணையும் நீதியும்தானே கல்வியாக இருக்க முடியும்?(மற்றபடி மனப்பாடமும் தேர்வும் மதிப்பெண்ணும் நம் வசதிக்காக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகவே எனக்கு தோன்றுகிறது) நாரதகான சபாவில் ஆர்.பாலகிருஷ்ண் ஐ.ஏ.எஸ் அவர்களின் நாட்டுக்குறள் ஒலிப்பேழை வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டோம். நாங்கள் சென்னை வந்திருக்கிறோம் என்று கேள்விப்பட்டு தற்பொழுது சென்னையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஓடிவந்தனர். அவரவர் ஆசிரியர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். சென்னைக்கு வரீங்கன்னு எங்ககிட்ட சொல்ல மாட்டீங்களா? என்று ஆதங்கத்தோடு கேட்டனர். தங்கள் ஆசிரியர்களை பார்த்த அன்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். வெளிப்படைதன்மையுள்ள அன்பையும் நேர்மையையும் வளர்த்திருக்கிறோம் என்ற பெருமை எங்களுக்கு தோன்றியது. அடுத்த தலைமுறை அழகாய் உருவாகிறது. ஆசிரியரும் மாணவரும் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தை பார்வையிட்டனர். பீரங்கீகளெல்லாம் விளையாட்டு பொருளாகவும் காட்சிப்பொருளாகவும் மாறவேண்டும். நவம்பர் மாதம் புரட்சியாளர்களின் மாதம். வரலாற்றின் மாதம்.சில நேரங்களில் வரலாறு நாம் நினைப்பது போலவும் நடந்து விடுகிறது. கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்களின் எழுத்துக்களை தமிழ் இந்து நடுபக்கத்தில் நாள்தோறும் பார்க்கிறோம். இவரை நம் ஆசிரியர்களுடன் காணவேண்டும் என்ற எனது பலநாள் ஆசை நிறைவேறியது. ஞாநி இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்களுடன் நாங்கள் 50 ஆசிரியர்கள் கலந்துரையாடினோம். பெரியார், பாரதி போன்றோர் வாழ்ந்த காலத்தில் நாம வாழவில்லையே என்று பல முறை சிந்தித்து இருக்கிறேன். ஆனாலும் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்று பெருமிதம் அடைகிறேன் என்று ஞாநி இவரை பற்றி கூறியவுடன் எங்கள் ஆசிரியர்கள் அதிசயித்து பார்த்தனர். பள்ளிகளும், ஆசிரியர்களும் சமூகத்திற்காக மட்டுமே என்ற சிந்தனையுடன் செயல்படுவதுதான் சிறந்த கல்வி என்றார் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

Login


Visitors Counter