ARINGAR POTRUDHUM 2016

அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும் 2016

சமுதாய மாற்றத்துக்கான சிந்தனை இளைஞர்களிடம் மேலோங்க வேண்டும் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு அறிவுரை.

இளைஞர்களிடம் சமுதாய மாற்றத்துக்கான சமுதாய சிந்தனை மேலோங்கினால்தான் நாடு முன்னேறும் என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தெரிவித்தார். திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 27.08.2016 சனிக்கிழமை நடைபெற்ற அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும், தமிழ் அறிஞர்களைப் போற்றும், நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் பேசியது. நம் குழந்தைகள் என்ன படிக்க வேண்டும். என்ன படிக்கக் கூடாது என்பதை பெற்றோர் தீர்மானிக்கின்றனர். தங்களது பிள்ளைகள் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக பெற்றோர் இதுபோல செய்கின்றனர். அண்மையில் முகநூலில் படித்த ஒரு செய்தி – ஒரு பள்ளி மாணவியின் பெற்றோர், தனது மகள் அண்ணா, பெரியார் போன்றவர்களைப் பற்றி படிக்காமலேயே அதிக மதிப்பெண்களை பெற்றதை பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். அண்ணா, பெரியார், மார்க்சியம், அம்பேத்கர் போன்றவர்களைப் படிக்காத படிப்பு படிப்பே அல்ல. அவர்களைப்பற்றி படிக்காதவர்கள், வாழ்க்கையில் முன்னேற முடியாது. மாணவர்கள் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் மட்டும் நமது வாழ்க்கையை முடிவு செய்யாது. தன்னார்வ அமைப்புகளை நசுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தன்னார்வ அமைப்புகளின் மக்களின் பல்வேறு பிரச்சினைகள நாடளுமன்றத்துக்கு கொண்டு வருகின்றன. தனிமனிதனை ஆதரிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. தன்னார்வலர்களின் முயற்சிகளை ஆதரிக்கப் பலரும் முன் வருவதில்லை. மக்களின் பொதுநலனை பாதுகாக்க கூடிய வகையில் நாம் செயல்படவேண்டும். இளைஞர்களிடையே சமுதாய மாற்றத்துக்கான சிந்தனை மேலோங்கினால்தான் நாடு முன்னேறும் என்றார். மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நூலகத்தை, அரிய கருவூலத்தை, அருமையான புத்தகங்கள் உள்ள அண்ணா நூலகத்தை திடீரென்று ஒருநாள் அரசாங்கம் மூட முயற்சித்தது. அதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நூலகத்தை மூடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நூலகத்தை அரசாங்கம் பாதுகாக்கவில்லை என்றால், நீதிமன்றமே பாதுகாக்கும் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளது. சில விருதுகள், கொடுக்கப்படுபவர்களால் சிறப்பு பெறுகின்றன. சில விருதுகள், பெற்றுக் கொள்பவர்களால் சிறப்பு பெறுகின்றன. தமிழ் அறிஞர்கள் இறக்கும்போது தமிழ்ச சமூகம் கண்டுகொள்வதில்லை. மற்ற மாநிலங்களில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செய்கிறார்கள். கவிஞர் ஞானகூத்தன் இறுதி ஊர்வலத்தில் 100 பேர் கூட பங்கேற்கவில்லை. பாரதியார் இறக்கும்போது பங்கேற்வர்கள் 17 பேர். தமிழ்அறிஞர்கள் இறக்கும் போது தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ளாதது வருத்தமாக இருக்கிறது. எனவே, அறிஞர்களைப் போற்றுங்கள் என்றார் அவர். விழாவில், ம.இலெ. தங்கப்பாவுக்கு வாழ்நாள் தமிழ் விருதும், பொ. வேல்சாமி, டி. திலீப்குமார், டிராடஸ்கி மருதுக்கு தமிழ் இலக்கிய விருதும், பி. சுரேஷ்குமார், கீதா ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சமூகநோக்கு விருதும், கே. உதயசங்கர், எஸ். தேன்மொழி, இரா. முருகவேல் ஆகியோருக்கு படைப்பூக்க விருதும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்துக்கு சிறப்பு நல்கை விருதும் வழங்கப்பட்டது. விழாவுக்கு பள்ளித் தலைவர் ஏ. ராமசாமி தலைமை வகித்தார். பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பள்ளி நிர்வாகிகள் எஸ். செல்வராஜன், எம். குமரவேல், பி. சத்தியமூர்த்தி பள்ளி முதல்வர் க. துளசிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Login


Visitors Counter